"நீங்க யாரை வேணும்னாலும் கூப்பிடுங்க" ... போலீசாரை வெறுப்பேற்றிய போதை ஆசாமி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று பெட்ரோல் பங்க் இயந்திரத்தின் மீது மோதி சேதப்படுதிய நபர் ஒருவர், போலீசாரிடம் அலப்பறை செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
காரைக்குடியை அடுத்த பள்ளத்தூரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்ற அந்த நபர், தீபாவளியன்று மூக்குமுட்ட குடித்துவிட்டு தனது மாருதி ஸ்விப்ட் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
போதையில் ஓட்டிச் சென்ற கார் நிலை தடுமாறி அங்கிருந்த பெட்ரோல் பங்க்கில், பெட்ரோல் நிரப்பும் இயந்திரத்தின் மீது மோதி, அது கீழே விழுந்து சேதமடைந்துள்ளது. விடுமுறை தினம் என்பதால் இயந்திரம் செயல்படாத நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.
காலில் காயத்துடன் அங்கிருந்த ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற மோகன் ராஜை பரிசோதித்த மருத்துவர், உள் காயமாக இருப்பதால் காரைக்குடி அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்து, அங்கிருந்து மருத்துவர்களை வரவழைத்து, தனக்கு இங்கேயே சிகிச்சை அளிக்குமாறு மோகன்ராஜ் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து ஆரம்ப சுகாதார நிலையம் தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டு அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். பங்க் தரப்பிலிருந்து அதுவரை புகார் வராததால் மோகன் ராஜிடம் பொறுமையாகப் பேசி காரைக்குடி செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
அதற்கும் மறுப்பு தெரிவித்த மோகன்ராஜ், தாம் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி என்றும் வேறு எங்கும் செல்ல முடியாது, இங்கேயே மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளியுங்கள் என்றும் வாக்குவாதம் செய்தார்.
ஒரு கட்டத்தில் தம்மை போலீசார்தான் மனிதாபிமானத்தோடு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என்று அவர்கள் பக்கமே புகார் வண்டியை திருப்பினார் மோகன்ராஜ்.
ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகளுக்கு தொல்லை ஏற்படக்கூடாது என்பதற்காக போலீசார் பல மணி நேரமாக அவருடன் பொறுமையாகப் பேசி அங்கிருந்து காரைக்குடி அனுப்பி வைக்கப்பார்த்தனர்.
ஆனால் டி.எஸ்.பி அல்லது எஸ்.பி என யார் வேண்டுமானாலும் வரட்டும் தாம் எங்கும் செல்ல முடியாது என அடம்பிடித்த மோகன்ராஜ், ஒரு கட்டத்தில் போலீசாரை அவதூறாகப் பேசத் தொடங்கினார்.
இந்த சம்பவம் தீபாவளி அன்று நிகழ்ந்த நிலையில் பங்க் உரிமையாளர் தரப்பில் தாமதமாகப் புகாரளிக்கப்பட்டதால், மோகன் ராஜ் மீது தாமதமாகவே வழக்குப்பதிவு செய்ய முடிந்தது. பங்க் தரப்பில் தம் மீது புகாரளிக்க உள்ளதை அறிந்த மோகன்ராஜ், தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments